போதையில் வாகனம் ஓட்டி இரு உயிர்களை காவுகொண்ட சாரதி சிக்கினார்!

ஹங்வெல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட எம்புல்கம – பனாகொட வீதியில் இடம்பெற்ற சோகமான வீதி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 6ஆம் திகதி மாலை, எம்புல்கம நோக்கிப் பயணித்த சிற்றூந்து ஒன்று, அதே திசையில் வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது மோதியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்துக்குப் பின்னர் குறித்த வாகனம் சம்பவ இடத்தில் நிறுத்தப்படாமல் தப்பிச் சென்றதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இரு பெண்களும் உடனடியாக நவகமுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் ரனால மற்றும் கிராந்துருகோட்டே பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 44 வயதுடைய பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகள் மற்றும் கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சாரதியை கைது செய்துள்ளனர். மேலும், விபத்துடன் தொடர்புடைய சிற்றூந்தும் கைப்பற்றப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் போது, விபத்து நிகழ்ந்த வேளையில் சாரதி மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top