இலங்கையில் வெறிநாய்க்கடி (ரேபிஸ்) நோய் பரவலைத் தடுப்பதற்கும், நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்கலுக்கும் அரசாங்கம் ஆண்டுதோறும் 5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை செலவிடுவதாக சுகாதார அமைச்சின் வெறிநாய்க்கடி ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் நிரோஷன் கமகே தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையில் ஒவ்வொரு 8 பேருக்கும் ஒரு நாய் என்ற விகிதத்தில் நாய் சனத்தொகை காணப்படுவதாகவும், நாட்டில் வீட்டு மற்றும் தெரு நாய்கள் சேர்த்து 27 முதல் 30 இலட்சம் வரை நாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இலங்கையில் பதிவாகும் வெறிநாய்க்கடி நோய்த் தொற்றுகளில் 98 சதவீதம் நாய்கள் மூலமாகவே பரவுவதாகவும், மீதமுள்ள 2 சதவீதம் பூனைகள், மாடுகள், அணில்கள் உள்ளிட்ட பிற பாலூட்டி விலங்குகள் காரணமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இரத்தினபுரி மாவட்டம் வெறிநாய்க்கடி அபாயம் அதிகம் காணப்படும் மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குருநாகல், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மாவட்டங்களும் அதிக ஆபத்து கொண்ட பகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
தற்போது நாட்டிலுள்ள நாய்களில் சுமார் 54 சதவீதத்திற்கு மட்டுமே ஆண்டுதோறும் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும், இதற்காக சுமார் 800 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாய்க்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சராசரி செலவு 3,500 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, நாய்கள் மற்றும் பூனைகள் கடியால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்குவதற்காக மட்டும் ஆண்டுதோறும் சுமார் 4 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தப்படும் நாய்களின் வீதத்தை 54 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக உயர்த்த முடிந்தால், இலங்கையில் இருந்து வெறிநாய்க்கடி நோயை முழுமையாக ஒழிக்க முடியும் என சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, 2028ஆம் ஆண்டுக்குள் இரத்தினபுரி மாவட்டத்தில் வெறிநாய்க்கடி நோயை முற்றாக ஒழிக்கும் இலக்குடன் செயற்படுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டுள்ளார்.
