
வெசாக் பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை களுத்துறை வடக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
காவல்துறையினரின் தகவலின்படி, கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பலவற்றில் இலக்கத் தகடுகள் பொருத்தப்படாமல் இருந்ததுடன், சைலன்சர்கள் மாற்றியமைக்கப்பட்டு அதிக சத்தம் எழும் வகையில் இயக்கப்பட்டிருந்தன.
மேலும், சில வாகனங்கள் பக்கக் கண்ணாடிகள் இன்றி வீதிகளில் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெசாக் வலயங்களை பார்வையிட வருகை தரும் பொதுமக்களுக்கு அசௌகரியம் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், அதிக சத்தத்துடனும் ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்கள் களுத்துறை நகருக்குள் நுழையவுள்ளதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது, விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவற்றை ஆபத்தான முறையில் இயக்கியவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
