நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக வரி விதிப்புகள் காரணமாக பெண்களுக்கான சுகாதார தயாரிப்புகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வால் குறிப்பாக கிராமப்புற பெண்கள், பாடசாலை மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அந்த அமைப்பின் விசேட மருத்துவர் சமல் சஞ்சீவ கூறியுள்ளார்.
இலங்கை ரூபாயின் மதிப்பிழப்பு, இறக்குமதி வரிகள், உற்பத்திச் செலவுகள் மற்றும் பல அடுக்கு வரி கொள்கைகள் ஆகியவை இணைந்து பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களின் விலையை ஆசியாவில் உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பணவீக்கம், மின்சார மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்திருப்பதும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக இருப்பதாகவும் அவர் விளக்கினார்.
இந்த நிலைமை காரணமாக, கிராமப்புறங்களில் “மாதவிடாய் சுகாதார பாதுகாப்பின்மை” உருவாகியுள்ளதாகவும், பல பெண்கள் மற்றும் மாணவிகள் மாதவிடாய் காலங்களில் வேலை மற்றும் பாடசாலைகளுக்கு செல்லாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, பெண்களுக்கான மாதவிடாய் சுகாதார தயாரிப்புகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் தேசிய அளவில் உடனடி கலந்துரையாடலும் தீர்வும் அவசியம் என மருத்துவர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.
