
இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக நடைபெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை காவல்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள் மற்றும் பல்வேறு இணையத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அண்மைக் காலமாக அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மோசடிகளில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபரால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி தொடர்பான தகவல்களை கணினி குற்ற விசாரணைப் பிரிவிற்கு 011 2300 756 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 071 859 2918 மற்றும் 071 859 1765 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலமும் தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக, குற்றவியல் விசாரணைத் திணைக்கள அலுவலகத்திற்கு நேரில் சென்று எழுத்துமூல முறைப்பாடுகளையும் சமர்ப்பிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
