
சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டு, விசா அல்லது தங்குமதி அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியிருப்பது கடுமையான குற்றமாகும் என எச்சரித்துள்ளது.
அந்த அறிவிப்பில், சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரசபை (ICA) அமுல்படுத்தும் சட்டங்களின் அடிப்படையில், அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியிருப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படலாம். மேலும் அபராதங்கள், கடுமையான தண்டனைகள், தடுத்து வைக்கப்பட்ட பின்னர் நாடுகடத்தல் மற்றும் நீண்டகால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசா காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு அடைக்கலம் வழங்குவதோ அல்லது தங்குமிடம் ஏற்பாடு செய்வதோ கூட சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, சிங்கப்பூரில் உள்ள அனைத்து இலங்கை நாட்டினரும் தங்களது விசா மற்றும் அனுமதிச் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை சரிபார்த்து, அவை காலாவதியாகும் முன்பே புதுப்பிப்பு அல்லது நீடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருப்பவர்கள் உடனடியாக சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரசபை (ICA) அதிகாரிகளை தொடர்புகொண்டு தங்களது குடிவரவு நிலையை சட்டபூர்வமாக ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
