சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கான இழப்பீடுகள், விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை ஊடாக வழங்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பயிர்ச்சேதங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது சேத விவரங்களை உரிய அதிகாரிகளிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக பல பகுதிகளில் விவசாய நிலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதற்கமைய, விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை மற்றும் தொடர்புடைய திணைக்களங்கள் ஊடாக இரண்டு வாரங்களுக்குள் அனைத்து பயிர்ச்சேத விபரங்களையும் அறிக்கையிடுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், களப்பணிகளில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட வயல் நிலங்கள் மற்றும் விவசாயிகளின் முழுமையான தகவல்கள் கிடைத்தவுடன் குறுகிய காலத்திற்குள் இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
எனவே, தங்களது விவசாய நிலங்கள் சேதமடைந்திருந்தால், அதுகுறித்த தகவல்களை உடனடியாக அதிகாரிகளிடம் வழங்குமாறு விவசாயிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, பிரேமசிறி ஜாசிங்கஆரச்சி கருத்து தெரிவிக்கையில், விவசாயிகள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் சேதமடைந்த பயிர் நிலங்களை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்வார்கள் என்றும், சேதத்தின் அளவினைப் பொருத்து இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
