
இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் தர்ப்பூசணி சாப்பிட்டதற்குப் பின்னர் திடீரென வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், சிகிச்சை பலனின்றி குறுகிய நேர இடைவெளியில் அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிலிருந்து தர்ப்பூசணி, பிரியாணி, தண்ணீர் மற்றும் மசாலா பொருட்கள் உள்ளிட்ட 11 மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.
மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மேற்கொண்ட ஆரம்ப பரிசோதனைகளில், உணவுகளில் வெளிப்படையான விஷ கலப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜே.ஜே மருத்துவமனை மருத்துவர் சஞ்சய் சுரசே, இது சாதாரண உணவு விஷத்தன்மையால் ஏற்பட்டதாக தோன்றவில்லை என்றும், மிகவும் வேகமாக உடல்நிலை மோசமடைந்துள்ளதால் வேறு தீவிர காரணம் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், உண்மை காரணத்தை உறுதி செய்ய மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் அறிக்கை வெளியான பின்னரே மரணங்களின் துல்லிய காரணம் வெளிவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
