
எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி கட்டணங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்ததாவது, பெற்றோல் விலை ரூ. 12 உயர்ந்துள்ள நிலையில் தற்போதைய கட்டண அமைப்பு தொடர முடியாது என்பதால் மாற்றம் அவசியம் என கூறினார்.
தற்போது மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை முச்சக்கர கட்டணங்களை நிர்ணயித்து வருகிறது. அதன்படி, முதல் கிலோமீற்றருக்கு ரூ. 100 மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கு ரூ. 90 வசூலிக்கப்படுகிறது
இந்த நிலையில், இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தையும் ரூ. 100 ஆக உயர்த்த வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், எரிபொருள் கட்டுப்பாடுகள் காரணமாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கடுமையான வாழ்வாதார சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாரத்திற்கு குறைந்தது 30 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
