
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் சமல் சஞ்சீவ கூறுகையில், இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான மதிப்பு வீழ்ச்சி மற்றும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக வெளிநாட்டு மருந்து விநியோகஸ்தர்கள் வழக்கமான விநியோகத்தை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது என தெரிவித்தார்.
இந்த மருந்துத் தட்டுப்பாட்டால் புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயாளிகள், அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் மற்றும் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை பெறுவோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சில மருந்துகளின் பதிவு தாமதம், அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள விலைகளில் மருந்துகளை இறக்குமதி செய்ய விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுதல் மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் கடும் வீழ்ச்சி ஆகியவை இந்த நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக, குறைந்த வருமானம் பெறும் நோயாளிகள் அதிக செலவில் வெளிநாடுகளிலிருந்து மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாட்டின் சுகாதார சேவைகள் மற்றும் நோயாளி பராமரிப்பு முறைமை கடுமையாக பாதிக்கப்படலாம் என மருத்துவர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார்.
