மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றநிலையால் உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்ததுடன், விநியோக சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதன் தாக்கமாக நாட்டின் மீன்பிடித் துறை கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலைமையை முன்னிட்டு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஜனாதிபதி இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
மீன்பிடித் தொழிலை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரவும், மீனவ சமூகத்தின் பொருளாதார சுமையை குறைக்கவும், அவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்குவது குறித்து இதில் முக்கியமாக பேசப்பட்டது. அதற்கான இறுதி முடிவு இன்று (06) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், உலகளாவிய அரசியல் நெருக்கடிகளின் மத்தியில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் மீனவ சமூகத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றார். எரிபொருள் விலை உயர்வால் கடலுக்குச் செல்ல முடியாத நிலையை சமாளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உறுதியாக செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்முயற்சி நடைமுறைப்படுத்தப்பட்டால், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு விரைவான நிவாரணம் வழங்கப்படுவதுடன், நாட்டின் மீன் விநியோகத்தையும் வழமையான நிலைக்கு கொண்டு வர முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
