வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற கோர சாலை விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (29) இரவு சுமார் 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பெரியஉளுக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ். தில்ஹால் சதுரங்க தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பேருந்து மோதியதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் தில்ஹால் சதுரங்க சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பலத்த காயமடைந்த அவரது மனைவி வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சொகுசு பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் தொடர்பில் ஈரற்பெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
