ஐபிஎல் 2026 தொடரில் இளம் அதிரடி வீரர் Vaibhav Sooryavanshi அபார ஆட்டத்தால் உலக கிரிக்கெட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த சீசனில் மட்டும் 65 சிக்ஸர்கள் அடித்த அவர், ஒரு டி20 தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக, 2012 ஐபிஎல் தொடரில் Chris Gayle 59 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதற்காக கெய்ல் 456 பந்துகளை சந்தித்திருந்தார். ஆனால் சூர்யவன்ஷி வெறும் 266 பந்துகளிலேயே அந்த சாதனையை முறியடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான Eliminator போட்டியில் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ஓட்டங்கள் குவித்து பல சாதனைகளை ஒரே போட்டியில் படைத்தார்.
அவரின் 16 பந்துகளில் வந்த அரைசதம், ஐபிஎல் பிளே-ஆஃப் வரலாற்றில் அதிவேக அரைசதம் என்ற Suresh Raina-வின் சாதனையை சமன் செய்தது.
அதே இன்னிங்ஸில் அவர் அடித்த 12 சிக்ஸர்கள், பிளே-ஆஃப் போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற Shubman Gill-வின் 10 சிக்ஸர் சாதனையை முறியடித்தது.
மேலும், முதல் 10 சிக்ஸர்களை வெறும் 24 பந்துகளில் எட்டிய அவர், குறைந்த பந்துகளில் 10 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் 27 பந்துகள் சாதனையையும் பின்னுக்குத் தள்ளினார்.
இந்த சீசனில் 15 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சூர்யவன்ஷி, 242.85 என்ற அபார ஸ்டிரைக் ரேட்டில் 680 ஓட்டங்கள் எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200-ஐ கடந்த ஸ்டிரைக் ரேட்டுடன் 600-க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கே சேர்ந்துள்ளது.
பவர்பிளே ஓவர்களில் மட்டும் 490 ஓட்டங்கள் எடுத்துள்ள அவர், 2016-ல் David Warner படைத்திருந்த 467 ஓட்டங்கள் சாதனையையும் முறியடித்துள்ளார்.
மேலும், சமீபத்திய போட்டியில் 334.48 என்ற அசுர ஸ்டிரைக் ரேட்டில் 97 ஓட்டங்கள் எடுத்த அவர், ஐபிஎல் வரலாற்றில் 90-க்கும் அதிகமான ஓட்டங்களை மிக உயர்ந்த ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையையும் பதிவு செய்துள்ளார்.
