
ஈரானில் உள்ள பல்வேறு இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) அறிவித்துள்ளது.
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இந்த இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரிலேயே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் அமைதி உடன்படிக்கைக்கு இணங்கத் தயாராகாத காரணத்தினால் கூடுதல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தெற்கு ஈரானில் ஹோர்முஸ் நீரிணைக்கு அண்மையில் அமைந்துள்ள மினாப் மற்றும் சிரிக் பகுதிகளில் பல வெடிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், எதிரி ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடி நடவடிக்கைகள் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், நிலைமையை உலக நாடுகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.
