அமெரிக்கா – ஈரான் மோதலுக்கு முடிவு: வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

100 நாட்களுக்கும் மேலாக நீடித்துவரும் அமெரிக்கா – ஈரான் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்றில் இணங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தேசிய பாதுகாப்பு பேரவை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜூன் 15ஆம் திகதி இரவு முதல் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டிருந்த கடற்படை முற்றுகை நீக்கப்படுவதுடன், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக திறக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ கையெழுத்து நிகழ்வு ஜூன் 19ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக, 60 நாட்களுக்குள் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான இறுதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவது, முடக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான டொலர் மதிப்பிலான ஈரானின் சொத்துகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது, மேலும் ஈரானைச் சூழவுள்ள பகுதிகளில் அமெரிக்க இராணுவப் பிரசன்னத்தை குறைப்பது ஆகியவை இடம்பெறுகின்றன.

இந்த அமைதி முயற்சியில் பாகிஸ்தான் மற்றும் கட்டார் முக்கிய மத்தியஸ்த பங்குகளை வகித்ததாக தெரிவிக்கப்படுவதுடன், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் ஆதரவு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் இதை “மத்திய கிழக்கிற்கான புதிய சகாப்தம்” என வர்ணித்துள்ளார்.

எனினும், ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாததால், அணுசக்தி திட்டம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top