அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அந்நாட்டின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளன.

வொஷிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறவிருந்த நூற்றுக்கணக்கான அணிவகுப்புகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கை நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சில நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஏற்பாட்டில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த Great American State Fair கண்காட்சியும், 38 பாகை செல்சியஸை எட்டிய வெப்பநிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், வருடாந்திர சுதந்திர தின அணிவகுப்பும் பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வாளர்களின் தகவலின்படி, Heat Dome எனப்படும் வளிமண்டல உயர் அழுத்த அமைப்பே இந்த தீவிர வெப்ப நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் 46 பாகை செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதுடன், சுமார் 18.5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கமாக மின்சாரத் தேவையும் கணிசமாக அதிகரித்துள்ளதால், நியூயோர்க் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் கட்டமைப்புகள் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன.
பல ஆயிரக்கணக்கான மக்கள் மின்சார விநியோகத் தடையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின் விநியோக நிறுவனங்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
