
வாதுவ பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் ஏ.டி.எம். (ATM) இயந்திரம் முன்பாக வான் படை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு சந்தேகநபர்களை வாதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 22 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடிகமுவ, பிட்டுகல்தெனிய பகுதியைச் சேர்ந்தவரும், மற்றையவர் அட்டால பகுதியைச் சேர்ந்தவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
