
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த 63 பேரில் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குவைத்தின் பிரதான விமான நிலையமான T1 முனையத்தில் இடம்பெற்ற தாக்குதலின் போது மூன்று இலங்கையர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களை சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைக்கு குவைத்திற்கான இலங்கைத் தூதர் லக்ஷித ரத்நாயக்க மற்றும் தொழிலாளர் நலப் பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று அவர்களின் நலனை விசாரித்துள்ளனர்.
தாக்குதல் நடைபெற்ற வேளையில் குறித்த இலங்கையர்கள் விமான நிலைய பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும், வெடிப்பின் தாக்கத்தால் சிதறிய கண்ணாடிச் சில்லுகள் தலை உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் காயங்களை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், யாருடைய உடல்நிலையும் கவலைக்கிடமாக இல்லை என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், காயமடைந்த மூவரும் இன்னும் சில நாட்களுக்குள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குவைத்தில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் அந்நாட்டு அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் வெளியிடும் உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களை பின்பற்றி அவதானத்துடன் இருக்குமாறு இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
