தாய்வான் இராணுவம் இந்த வாரத்தில் தனது “உடனடி போர் தயார்நிலை” (Immediate Combat Readiness) பயிற்சியை ஆரம்பித்துள்ளதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி, உண்மையான போர்க்கள சூழ்நிலைகளை உருவகப்படுத்தி, இராணுவத்தினரின் செயல்திறன் மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பமான இந்தப் பயிற்சியில் அனைத்து மட்டங்களிலும் உள்ள இராணுவப் பிரிவுகள் பங்கேற்கவுள்ளதுடன், போர் நடைமுறைகள் மற்றும் அவசரகால பதிலளிப்பு திறன்களை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த நடவடிக்கை, தாய்வான் ஆயுதப் படைகளின் வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாகும் என அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய்வானை தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியாக சீனா தொடர்ந்து உரிமை கோரி வரும் நிலையில், இந்த இராணுவப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தாய்வானைச் சுற்றியுள்ள வான்வெளி மற்றும் கடற்பரப்புகளில் சீன இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு சூழ்நிலையில் இந்தப் பயிற்சி முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
