‘கருப்பு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகும். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பட்டாம்பூச்சி’ பாடலும் அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளன.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், நாசர், சுதா, சுனில், பவானி ஸ்ரீ, காளி வெங்கட், ஜோர்ஜ் மரியான், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். குடும்ப பொழுதுபோக்கு (Family Entertainer) வகையில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீ கரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. தயாரிப்பாளர்களாக சூரியதேவரா, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா பணியாற்றியுள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘பட்டாம்பூச்சியாய் ஜெட்டா மாத்தி விட்டானே..’ எனத் தொடங்கும் பாடலும் அதன் லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் எழுதிய இந்தப் பாடலை பின்னணி பாடகி சுப்லாஷினி பாடியுள்ளார்.
உரையாடலுடன் தொடங்கும் இந்தப் பாடல், அதன் இசை மற்றும் வரிகள் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்திலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
