
இன்று இரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் மழையுடனான வானிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
அதேவேளை, ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள், மேலும் திருகோணமலை மாவட்டம் ஆகிய பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று அடிக்கடி வீசக்கூடும்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடல் பிராந்தியங்களுக்கான எச்சரிக்கை
சிலாபம் முதல் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையிலான கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பகுதிகளில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், சிலாபம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இதன் காரணமாக குறித்த கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பகுதிகளும் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாக இருக்கக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
