
இலங்கையின் பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்திற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 21 மாவட்டங்களில் சில பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘அவதான மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் நிலவும் சூழலில் நீண்ட நேரம் இருப்பதால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், தொடர்ந்து கடின உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருக்காமல் நிழலான இடங்களில் ஓய்வு எடுக்கவும், கடினமான வெளிப்புற பணிகளை குறைக்கவும், பணியிடங்களில் இடைவேளைகளை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்துடன், மெல்லிய மற்றும் வெள்ளை அல்லது இளநிற பருத்தி ஆடைகளை அணிவது உடல் வெப்பத்தை குறைக்க உதவும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
