தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் அரசின் மாதாந்த முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்காக, விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இந்தத் திட்டம், கிராமிய வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய முதியோர் செயலகம், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றின் இணைப்பில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தற்போது 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள முதியவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 10 இலட்சம் பயனாளிகள் உள்ள நிலையில், தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் சுமார் 76,716 பேர் இந்த உதவித்தொகையைப் பெற முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் தொடர்பாக தேசிய முதியோர் செயலகம் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை இல்லாததால் உதவித்தொகையைப் பெற முடியாத முதியவர்கள், தங்களது கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் அல்லது முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரை உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தகுதியுள்ள பயனாளிகளை அடையாளம் கண்டு விரைவாக உதவித்தொகைத் திட்டத்தில் இணைப்பதற்காக மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள், சமூக சக்தி அமைப்புகள் மற்றும் சமூக மேம்பாட்டுக் குழுக்களின் ஊடாகத் தகவல் சேகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தகுதியுள்ள எந்தவொரு முதியவரும் அடையாள ஆவணப் பிரச்சினையால் சமூகப் பாதுகாப்பு நலன்களை இழக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
