
மாறிவரும் நவீன வாழ்க்கை முறையில், மனிதர்களுக்கு மிகவும் அவசியமான தூக்கத்தின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. தூக்கத்தின் அருமை, அதன் பயன் போன்றவை பற்றி பலர் அறிந்திருந்தாலும், அதை நடைமுறையில் கடைப்பிடிக்காமல் இருப்பது கவலைக்குரியது. குறிப்பாக இன்றைய இளைஞர்கள் போதுமான நேரம் தூங்குவதில்லை.
முன்னர், பெரும்பாலானவர்கள் தினமும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூங்குவது வழக்கமாக இருந்தது. அதனால் உடல் ஆரோக்கியமும் சீராக இருந்தது. ஆனால் இன்று, 4 முதல் 6 மணி நேரம் மட்டுமே தூங்குவது சாதாரணமாகி விட்டது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் இரவில் வேலை செய்து, பகலில் தூங்கும் பழக்கத்திற்கு மாறியுள்ளனர். இந்த மாற்றம் உடலின் இயல்பான ஒழுங்கை பாதிக்கிறது.
மருத்துவ நிபுணர்கள் கூறுவதன்படி, சரியான தூக்கம் உடல் வளர்ச்சிக்கும், மன நலத்திற்கும் மிகவும் அவசியமானது. இருந்தாலும், இதன் முக்கியத்துவத்தை பலர் உணரவில்லை.
சமீபத்தில் ஒரு சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வின் படி, தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்குபவர்கள் உடல் ஆரோக்கியத்தில் மேம்பட்டவர்களாகவும், இதயத் துடிப்பு சீராக இருப்பவர்களாகவும் காணப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, இளம் தலைமுறை தங்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்காக போதுமான தூக்கத்தை பெறுவது மிகவும் அவசியம். தூக்கத்தை அலட்சியம் செய்யாமல், ஒழுங்கான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான முக்கியமான படியாகும்.
