2018 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டுகளில் மொத்தம் 267,138 மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2018–2024 காலப்பகுதிக்கான வருடாந்திர பாடசாலை மாணவர் தொகைக் கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முதலாம் தரம் முதல் பத்தாம் தரம் வரை ஒவ்வொரு வகுப்பிலும் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும், கல்வியை இடைநிறுத்தியோரின் விகிதங்களும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கீட்டு முறையின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, 2018 ஆம் ஆண்டில் 38,839 மாணவர்கள், 2019 இல் 41,503 பேர், 2020 இல் 32,540 பேர், 2021 இல் 25,492 பேர், 2022 இல் 52,596 பேர், 2023 இல் 50,345 பேர் மற்றும் 2024 இல் 25,823 பேர் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக பதிவாகியுள்ளது.
குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் கல்வியை இடைநிறுத்திய மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக இந்தப் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
எனினும், கல்வியை இடைநிறுத்திய அனைத்து மாணவர்களும் கல்வியை முழுமையாக கைவிட்டவர்கள் அல்ல என்றும், சிலர் சர்வதேச பாடசாலைகளில் இணைந்திருப்பதோ அல்லது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள கல்வி முறையில் தொடர்ந்திருப்பதோ சாத்தியமான காரணங்களாகக் கருதப்படுகின்றன.
மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்துவதற்கான முக்கிய காரணங்களாக தனிப்பட்ட பிரச்சினைகள், பாடசாலைச் சூழல், குடும்ப மற்றும் பொருளாதார காரணிகள், சமூகச் சவால்கள் மற்றும் மாற்று கல்வி அல்லது தொழிற்பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
