
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மிண்டானாவோ தீவுக்கு அருகில் இன்று (8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் ஆழிப்பேரலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் (GFZ) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. ஆரம்பத்தில் 8.2 ரிக்டர் அளவாக மதிப்பிடப்பட்ட இந்த நிலநடுக்கத்தின் வலிமை பின்னர் 7.8 ரிக்டர் அளவாக திருத்தப்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவின் புவியியல் மற்றும் பேரிடர் கண்காணிப்பு அமைப்புகள் ஆழிப்பேரலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும், இதுவரை எந்தவித பாரிய சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் (PHIVOLCS), இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஒரு மீற்றருக்கும் அதிக உயரத்தில் அலைகள் உருவாகக்கூடும் என்றும், அவை பல மணிநேரங்கள் வரை நீடிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
அதேவேளை, இந்தோனேசியாவின் BMKG புவியியல் நிறுவனம் இந்த நிலநடுக்கத்தின் வலிமையை 7.7 ரிக்டர் அளவாகப் பதிவு செய்துள்ளது. அமெரிக்க ஆழிப்பேரலை எச்சரிக்கை மையமும் இந்த நிகழ்வைத் தொடர்ந்து ஆழிப்பேரலை அச்சுறுத்தல் தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மனாடோ நகரிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வலுவாக உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் இரண்டும் பசிபிக் பெருங்கடலைச் சூழ்ந்துள்ள, நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்படும் ‘பசிபிக் நெருப்பு வளையம்’ (Pacific Ring of Fire) எனப்படும் புவியியல் அபாயப் பகுதியில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
