டிட்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, மிக அவசரமான சில விசேஷ நிலைகளைத் தவிர, அனைத்து பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று (22) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மதிப்பீட்டு கூட்டத்தின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
முழுமையாக சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு புதிய வீடுகள் வழங்குவது அல்லது வீடு வாங்குவதற்காக 50 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்கும் நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. அந்த நிதி உதவியையும் விரைவாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
தற்போது முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை, நிரந்தர வீடுகள் கிடைக்கும் வரை தற்காலிக வீடுகளில் குடியமர்த்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதற்கான பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்து, வேலைகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறப்பட்டது.
மேலும், ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது மற்றும் இழப்பீடு பெறாதவர்களுக்காக புதிய வீட்டு திட்டங்களை உருவாக்குவது தொடர்பாகவும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது
