தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரும், “இயக்குநர் இமயம்” எனப் போற்றப்பட்டவருமான பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக இன்று (10.06.2026) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84.

கடந்த சில நாட்களாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று அதிகாலை உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அவரது மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாரதிராஜாவின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவில் புதிய மாற்றத்தை உருவாக்கியவர் எனப் போற்றப்படுகிறார். கிராமிய வாழ்க்கை, மண் வாசனை மற்றும் இயற்கை சூழலை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியதில் அவருக்கு தனி இடம் உண்டு.
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை மற்றும் கருத்தம்மா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் அழியாத முத்திரையை பதித்தார்.
திரையுலகிற்கான அவரது பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி சிறப்பித்தது. மேலும் பல தேசிய மற்றும் மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
பாரதிராஜாவின் மறைவு செய்தி தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் சமூக ஊடகங்கள் வழியாக தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
