
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தொடர்ச்சியான மழை காரணமாக சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால் இந்த எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும், கண்டி மாவட்டத்தின் தொலுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, அயகம, இரத்தினபுரி, கொடக்கவெல, கலவான மற்றும் நிவித்திகல பிரதேச செயலகப் பிரிவுகளும் எச்சரிக்கை வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.
