
லெபனான்–இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், லெபனானில் நிலை கொண்டுள்ள இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பொதுமக்களின் சொத்துக்களை சேதப்படுத்துவதும், கொள்ளையடிப்பதும் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
அண்மையில் தபெல் நகரில், இராணுவ சீருடை அணிந்த ஒருவர் இயேசு கிறிஸ்து சிலையை உடைக்கும் காட்சி வைரலானது. அதே நகரில் தற்போது கன்னி மரியாள் சிலை அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு புகைப்படம் வெளியாகி சர்வதேச அளவில் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புகைப்படத்தில், ஒரு இஸ்ரேல் இராணுவ வீரர் கன்னி மரியாள் சிலையின் வாயில் சிகரெட் வைத்து அவமதிக்கும் வகையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வீரர் அடையாளம் காணப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளதாக Times of Israel செய்தி வெளியிட்டுள்ளது.
