
இஸ்ரேல் மற்றும் ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கிடையில் நீடிக்கப்பட்டுள்ள புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் மோதல்களை முழுமையாக கட்டுப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐக்கிய நாடுகளுக்கான இஸ்ரேலின் தூதுவர் டேனி டானன், லெபனான் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், போர்நிறுத்தத்தை பாதிக்கும் வகையில் ஹிஸ்புல்லா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், அச்சுறுத்தல் ஏற்படும் ஒவ்வொரு தருணத்திலும் இஸ்ரேல் தகுந்த பதிலடி வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய போர்நிறுத்தம் முழுமையாக வெற்றியடையும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும், ஆனால் லெபனான் ராணுவம் இதைச் செயல்படுத்தி வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் மற்றும் லெபனான் தூதுவர்கள் சந்தித்ததையடுத்து, ஏற்கனவே அமலில் இருந்த 10 நாள் போர்நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளது.
