
ட்ரோன் தாக்குதல்களில் பெரும் சேதம் என தகவல்
ஈரான் நடத்திய தாக்குதல்களில், அமெரிக்க இராணுவத்தின் வான்படைக் கட்டமைப்பில் உள்ள “ரீப்பர்” (Reaper) ரக ஆளில்லா போர் வானூர்திகளில் சுமார் 20 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் சூழல் உருவானதிலிருந்து இதுவரை 24-க்கும் மேற்பட்ட MQ-9 Reaper வகை ஆளில்லா வானூர்திகளை ஈரான் அழித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த இழப்புகளின் மதிப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, போர் தொடங்குவதற்கு முன்பு பென்டகன் வசம் இருந்த மொத்த ஆளில்லா வான்வழி வாகனங்களின் கிட்டத்தட்ட 20 சதவீதமாகும்.
அறிக்கைகளின்படி, பெரும்பாலான வானூர்திகள் பறந்து கொண்டிருந்தபோது ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. சில வானூர்திகள் அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களின் போது தரையிலேயே அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சிலவை தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் விபத்துகள் காரணமாக இழக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கைகளின்படி, இந்த மோதலின் போது குறைந்தது 42 இராணுவ வானூர்திகள் சேதமடைந்தவையோ அல்லது முற்றாக அழிக்கப்பட்டவையோ ஆகும்.
இதன் மூலம் மொத்த இராணுவ உபகரண இழப்பு சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
