
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மற்றும் சில வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஈரானிய புரட்சிகர காவற்படை தொடர்புடையதாக கூறப்படுகிறது.
பிரித்தானிய கடல்சார் வர்த்தகச் செயற்பாட்டுப் பிரிவு (UKMTO) தெரிவித்ததாவது, ஓமானின் வடகிழக்கில் சுமார் 20 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பலை, ஈரானிய அதிவேகப் படகுகள் அணுகியுள்ளன. எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி கப்பலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், கப்பலும் அதிலிருந்த பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இன்னும் இரண்டு வணிகக் கப்பல்களும் இதேபோன்ற தாக்குதலுக்கு உள்ளானதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்காவின் கடல்சார் நடவடிக்கைகளுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக ஈரான் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 24 மணிநேரத்திற்கும் குறைவான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
