குழந்தைகள் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியுள்ள பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களை அருகிலுள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் சில சிறுவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண பதிவாளர் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையிலும் சிறுவர்களை பாதுகாப்பான முறையில் அருகிலுள்ள பாடசாலைகளில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலமாக பாடசாலைக் கல்வியிலிருந்து விலகியிருந்த சில சிறுவர்கள் தற்போது குழந்தைகள் அபிவிருத்தி நிலையங்களுக்கு வருவதாகவும், அவர்களின் கல்வி இடைவெளியை குறைப்பதற்காக விசேட கல்வித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குழந்தைகள் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியுள்ள சிறுவர்களின் சுகாதார நிலைமை தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு சிறுவருக்கும் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுகாதாரப் பரிசோதனை மேற்கொண்டு, அதற்கான அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதேச சுகாதார அதிகாரிகள் ஊடாக குழந்தைகள் அபிவிருத்தி நிலையங்களை கண்காணித்து, அங்கு தங்கியுள்ள சிறுவர்களின் சுகாதார நிலைமை தொடர்பான அறிக்கைகளை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குழந்தைகள் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியுள்ள சிறுவர்களை அவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் இணைக்க வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே சுற்றறிக்கைகள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, சிறுவர்களின் கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு விரிவான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
