
நாட்டின் பல பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ, தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள், மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய, சபரகமுவ, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுதல், தாழ்நிலப் பகுதிகளில் நீர் தேங்குதல் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
