
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் நேற்று (13) கைலாசபதி அரங்கில் இடம்பெற்றன.
நேற்று ஆரம்பமான இந்த மாநாட்டில் தமிழிசை தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆய்வளிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இசைத்துறையின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு, தமிழிசை ஆய்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கந்தையா கார்த்திகேசு நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த மாநாடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவர் சி. சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக தி. வேல்நம்பி கலந்துகொண்டதுடன், மாநாட்டின் முதன்மைக் கருத்துரைஞராக அரிமளம் பத்மநாபன் பங்கேற்று உரையாற்றினார்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த மாநாடு, தமிழிசை ஆய்வுத் துறையின் வளர்ச்சிக்கும் ஆவணப்படுத்தலுக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
