இலங்கையில் டெங்கு நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நிலைமை இன்னும் கவலைக்கிடமானதாக இருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,217 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 21,565 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டெங்கு பாதிப்புகள் அதிகளவில் பதிவாகியுள்ள பகுதி மேல் மாகாணமாகும். மொத்த நோயாளர்களில் 52.5 சதவீதம் பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, கொழும்பில் 11,392 பேரும், கம்பஹாவில் 11,006 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், வீடுகள், பொது நிறுவனங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்னும் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அதிகளவில் காணப்படுவதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
தற்போது டெங்கு வைரஸின் DENV-2 மற்றும் DENV-3 வகைகள் அதிகமாக பரவி வருவதால், நுளம்புக் கடியால் பொதுமக்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய அபாயம் நிலவுவதாக மருத்துவர் கபில கன்னங்கர எச்சரித்தார்.
மேலும், பாடசாலைகள் மற்றும் அரச நிறுவன வளாகங்களில் நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளதால், கல்வி அமைச்சும் சுகாதார அதிகாரிகளும் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, சிறுவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால், பாடசாலை வளாகங்களை சுத்தமாக பராமரிப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்னும் போதுமான அளவில் இல்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார். டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட வீடுகளிலேயே மீண்டும் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்படுவது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பெரும்பாலான மருத்துவமனைகள் தங்களின் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதால், சுகாதாரப் பணியாளர்கள் கடும் பணிச்சுமையை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலை தொடருமானால், டெங்கு நோயாளர்களுக்கு மட்டுமன்றி பிற அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களுக்கும் சிகிச்சை வழங்குவதில் சிரமம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தவும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்றி சுகாதார அதிகாரிகளுடன் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
