
அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (22) முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
பண்டிகைக் கால செலவுகளை முன்னிட்டு, குறிப்பாக முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த நிதியை தாமதமின்றி வழங்க அரசாங்கம் விசேட நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
இந்த மாத கொடுப்பனவுகளில் 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நிதி இரண்டு கட்டங்களாக ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட 617,406 பயனாளர்களுக்கு மொத்தம் 3.087 பில்லியன் ரூபாய் வழங்கப்பட உள்ளது. மேலும், அதே வயது பிரிவில் சேர்ந்த 72,525 பயனாளர்களுக்கு 362.6 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
தகுதியுடைய பயனாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்து, உரிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பண்டிகை காலத்திற்குப் பிறகு உருவாகும் பொருளாதார தேவைகளை சமாளிக்க இந்த நிதி பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
