கடும் மழை – வெள்ளப்பெருக்கு: பேங்கொக்கின் 50 வலையங்கள் பேரழிவுப் பகுதிகளாக அறிவிப்பு

தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் பெய்து வரும் கடும் மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நகரின் 50 வலையங்களும் பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, நாடு முழுவதும் 21 மாகாணங்களைச் சேர்ந்த 84,000க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்கொக்கில் பல முக்கிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளுக்கான பேருந்து சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கால்வாய்களில் நீர்மட்டம் அதிகரித்து வழிந்தோடுவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறும், அத்தியாவசியப் பொருட்களை மேல்தளங்களுக்கு மாற்றுமாறும் பேங்கொக் மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மழை தொடரக்கூடும் என தாய்லாந்து வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top