பிரேசில் சீரி ஏ கால்பந்து தொடரில் கோல் காப்பாளர்கள் நேரத்தை வீணடிப்பதைத் தடுக்கும் வகையில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதியின் கீழ், ஒரு நிமிடத்திற்கு களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் என்ற பெயரை சாண்டோஸ் அணியின் தலைவர் நெய்மர் பெற்றுள்ளார்.

புதிய விதியின்படி, ஆட்டத்தின்போது கோல் காப்பாளர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டால், ஆட்டம் மீண்டும் ஆரம்பிக்கும் போது 1 நிமிடத்துக்கு ஒரு வெளிக்கள வீரரை களத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
இதற்காக பயிற்சியாளர் 10 விநாடிகளுக்குள் ஒரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு வீரரை குறிப்பிடத் தவறினால், அணியின் தலைவரே ஒரு நிமிடத்திற்கு களத்தை விட்டு வெளியேற வேண்டும்.
வாஸ்கோ ட காமாவுக்கு எதிரான போட்டியில் சாண்டோஸ் அணியின் கோல் காப்பாளர் கேப்ரியல் பிராஸாவ் மருத்துவ சிகிச்சை கோரியிருந்தார். இதன்போது, சாண்டோஸ் பயிற்சியாளர் 10 விநாடிகளுக்குள் எந்தவொரு வீரரையும் குறிப்பிடத் தவறியதால், அணித்தலைவர் நெய்மரை ஒரு நிமிடம் களத்திலிருந்து வெளியேறுமாறு நடுவர் உத்தரவிட்டார்.
இதன் மூலம், இந்தப் புதிய விதியின் கீழ் களத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு வெளியேற்றப்பட்ட முதல் வீரர் என்ற சாதனையை நெய்மர் பெற்றுள்ளார்.
எனினும், இந்தச் சம்பவம் சாண்டோஸ் அணியின் வெற்றிக்கு தடையாக அமையவில்லை. அந்த அணி வாஸ்கோ ட காமாவை 3–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்நிலையில், கோல் காப்பாளர்களின் நேரத்தை வீணடிக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சோதனை விதி, இங்கிலீஷ் பிரீமியர் லீக் உள்ளிட்ட ஏனைய கால்பந்து தொடர்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
