நாட்டில் நிலவி வரும் கடுமையான தாதியர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், ஓய்வு பெறவுள்ள தாதியர்களின் சேவைக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நேற்று (14) ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாகவும், வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான அளவில் தாதியர்கள் இல்லாததால் சுகாதார சேவையில் கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், அவர்களுக்கு பயிற்சி அளித்து முழுமையாக சேவையில் ஈடுபடுத்த சுமார் மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய தாதியர் பற்றாக்குறை காரணமாக, ஒரு தாதியர் பலரின் பணிச்சுமையை ஏற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும், தொடர்ச்சியான அதிக பணிச்சுமை அவர்களின் உடல்நலத்தையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரித்துள்ளார்.
இந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறவுள்ள தாதியர்களின் ஓய்வு வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதற்கான விசேட நடவடிக்கையை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தனது கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
