டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் டெங்கு நோயாளர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் வகையில் இந்த மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் கொன்தசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், மேல் மாகாண ஆயுர்வேத திணைக்களம் புதிய ஆயுர்வேத மருந்தொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அதனை மேல் மாகாணத்திலுள்ள வீடுகளுக்கு விநியோகித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் புகையூட்டும் பொடியும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த மருந்துகள் மற்றும் புகையூட்டும் பொருட்கள் அரச நிதியில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதால், அவற்றை வீணாக்காமல் முறையாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
