சுமார் ஓராண்டு கால இடைநிறுத்தத்திற்குப் பின்னர், வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் மற்றும் விநியோகிக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 8, 2026 முதல், வெரஹெரவிலுள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்தில் இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் உத்தியோகபூர்வமாக மீளத் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகள் தற்போது இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் பகல் நேரத்தில் அச்சிடப்படவுள்ளன. அதேவேளை, சுமார் ஒரு மில்லியன் இலக்கத் தகடுகள் வழங்கப்பட வேண்டிய நிலுவையை குறைக்கும் நோக்கில், இரவு நேரங்களில் மேலதிக பணியாளர்களின் உதவியுடன் நிலுவைத் தகடுகள் அச்சிடப்படும்.
எதிர்காலத்தில் இலக்கத் தகடுகள் விநியோகத்தில் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தனியார் நிறுவனமொன்றுடன் 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
