மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்ட ஐந்து தனியார் பேருந்துகளை இரத்தினபுரி தலைமையக காவல்துறையின் போக்குவரத்து பிரிவினர் இன்று (7) விசேட சோதனை நடவடிக்கையின்போது பறிமுதல் செய்துள்ளனர்.

இரத்தினபுரி நகரை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த பேருந்துகள் கண்டறியப்பட்டதாக, போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறைப் பரிசோதகர் ருவன் தர்மபால தெரிவித்தார்.
வாகன உற்பத்தியாளர்கள் பரிந்துரைத்த எரிபொருளுக்கு பதிலாக வேறு எரிபொருட்களை பயன்படுத்துவதோ அல்லது அவற்றைக் கலவையாக பயன்படுத்தி வாகனங்களை இயக்குவதோ சட்டவிரோதமான செயல் என அவர் வலியுறுத்தினார்.
மண்ணெண்ணெய் அல்லது டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து வாகனங்களை இயக்கும்போது வெளியேறும் நச்சுப் புகை மனித உடல்நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இவ்வாறு இயக்கப்படும் வாகனங்கள் விபத்துக்குள்ளானால் உடனடியாக தீப்பற்றும் அபாயம் அதிகமாக இருப்பதுடன், விபத்து ஏற்படாத நிலையிலும் திடீரென தீப்பற்றும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.
இதனிடையே, மலைப்பாங்கான சாலைகளில் சேவையில் ஈடுபடும் பல பேருந்துகளின் டயர்கள் அதிகளவில் தேய்ந்திருந்ததும் சோதனையில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான பேருந்துகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
