
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) திருத்திய புதிய பேருந்து கட்டணங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 6) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய கட்டண திருத்தத்தின்படி, சாதாரண பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 இலிருந்து ரூ.34 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், சாதாரண பேருந்து சேவைகளில் 100 கிலோமீற்றர் வரையிலான பயணங்களுக்கான கட்டணம் 12 சதவீதத்தாலும், 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரப் பயணங்களுக்கான கட்டணம் 20 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சொகுசு பேருந்து சேவைகளில் 100 கிலோமீற்றருக்குட்பட்ட பயணங்களுக்கான கட்டணம் 12 சதவீதத்தாலும், 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட பயணங்களுக்கான கட்டணம் 15 சதவீதத்தாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
இயக்கச் செலவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு, பயணிகள் போக்குவரத்து கட்டணங்களை திருத்துவது தொடர்பாக எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
