கடந்த ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 9.90 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அந்த எண்ணிக்கை 124,551 ஆகக் குறைந்துள்ளது.
இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து 43,423 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகையில் 35 சதவீதமாகும்.
இந்தியாவைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் இருந்து 10,474 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 8,710 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை இலங்கை எட்டத் தவறியிருந்தது. இருப்பினும், 2026 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 1,146,573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது ஆண்டு இலக்கை நோக்கி முன்னேற்றம் காணப்பட்டாலும், அண்மைய மாதாந்திர வீழ்ச்சி சுற்றுலாத்துறைக்கு சவாலாக அமைந்துள்ளது.
