
கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 21 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்களால் கடல்வழிப் போக்குவரத்தில் ஏற்பட்ட தடங்கல்கள் காணப்பட்ட போதிலும், ஏற்றுமதி வருமானத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியுள்ளது.
இந்த சவால்களை சமாளிப்பதற்காக, ஏற்றுமதியாளர்கள் மாற்று போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தியதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தேங்காய் மற்றும் இளநீர் ஏற்றுமதிக்காக வானூர்தி சரக்கு சேவைகளைப் பயன்படுத்துமாறு ஏற்றுமதியாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். இதன் மூலம் கடல்வழிப் போக்குவரத்து பாதிப்புகள் இருந்தபோதிலும், ஏற்றுமதி நடவடிக்கைகள் இடையூறு இன்றி தொடர முடிந்ததாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச கப்பல் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்ள துரிதமான மாற்று போக்குவரத்து தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டமை, இலங்கையின் தெங்கு ஏற்றுமதித் துறையின் வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
