
புத்தளம் மாவட்டத்தின் தில்லையடி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரத்திற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு நீர்கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியுடன் மோதியதுடன், பின்னர் அருகிலிருந்த கட்டடமொன்றிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தில்லையடி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேனின் முன்பாக கார் ஒன்று திடீரென வீதியைக் குறுக்கே கடந்துள்ளது. அதனைத் தவிர்க்க முயன்றபோது வேன் சாரதி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர் வேன், பாலாவி திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதோடு, வீதியின் மறுபுறத்தில் அமைந்திருந்த கட்டடத்திற்குள் புகுந்து சேதப்படுத்தியுள்ளது.
ஆறு பயணிகளுடன் பயணித்த வேனை சம்பவ நேரத்தில் பெண் ஒருவர் செலுத்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் வேனில் பயணித்த இருவரும், முச்சக்கரவண்டியில் இருந்த மூவரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், வேன் மோதிய கட்டடத்திற்குள் அச்சமயம் பெண்கள் குழுவொன்று இருந்தபோதிலும், அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படாதது பெரும் அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
