டெங்கு பரவல் அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன கூறுகையில், ஜனவரி மாதம் முதல் டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தியைக் காட்டும் பிரெடோ சுட்டெண் தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததாகவும், ஏப்ரல் மாதமளவில் நாட்டின் பல பகுதிகளில் அது 25 சதவீதத்தைத் தாண்டியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை தொடர்பாக ஏப்ரல் மாதத்திலேயே டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் ஊடாக சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், சில பிரிவுகளில் தீர்மானங்களை எடுப்பதில் ஏற்பட்ட தாமதம் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், தொற்று நோய் பரவக்கூடிய அபாயம் இருப்பதை ஆய்வுத் தரவுகள் தெளிவாகக் காட்டியிருந்த போதிலும், தடுப்பு நடவடிக்கைகள் தாமதிக்கப்பட்டதன் விளைவாக ஜூன் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், 2017ஆம் ஆண்டு பரவிய அதே வகை டெங்கு வைரஸ் மீண்டும் 2026ஆம் ஆண்டில் பரவத் தொடங்கியுள்ளதாலும், அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடையே போதியளவில் இல்லாததாலும் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர, இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் பாதிப்பு விபரங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
