பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எனத் தங்களை அடையாளப்படுத்தி, வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து பணம் மோசடி செய்யும் குழுவொன்று இயங்கி வருவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெங்கு ஒழிப்பு தொடர்பான தற்போதைய பரிசோதனை நடவடிக்கைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அச்சுறுத்தி பொதுமக்களிடம் பணம் கோரும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தங்களது உத்தியோகபூர்வ கடமைகளை மேற்கொள்ளும் போது எந்தவொரு காரணத்திற்காகவும் பணம் வசூலிப்பதோ அல்லது கட்டணம் பெறுவதோ இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு எவரேனும் பணம் கோரினால், அவர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏதேனும் எதிர்கொண்டால், உடனடியாக காவல்துறையினருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் விழிப்புடன் இருந்து இத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்கு இரையாகாமல் இருக்குமாறும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
